மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியக்குழு ஆய்வு


மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியக்குழு ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2021 8:52 PM GMT (Updated: 23 Nov 2021 8:52 PM GMT)

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்ட அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்ைட அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். 
மத்தியக்குழு ஆய்வு
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழையினால் சம்பா, தாளடி நெற் பயிர்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்புகள் குறித்து தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய உள் துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன்துறை இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ராணஞ்சாய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் கொண்ட மத்தியக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களுடன் தமிழக அரசின் முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுமேலாளர் சுரேஷ் ஆகியோர் வந்தனர்.
கலெக்டர் விளக்கம்
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் உக்கடை ஊராட்சி அருகே சேர்மாநல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களையும், புகைப்படங்களையும் நேற்றுமாலை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மாவட்டத்தில் மழையால் ஏறத்தாழ 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற் பயிர்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கம் அளித்தார்.
மேலும், மாவட்டத்தில் தொடர் மழையால் தோட்டக்கலைப் பயிர்கள், 1,331 கூரை வீடுகள், 316 ஓட்டு வீடுகள் சேதமடைந்தது, 368 மாடுகள், 82 ஆடுகள், 5 எருமைகள் இறந்தது, ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் கலெக்டர் விளக்கி கூறினார்.
விவசாயிகள் கோரிக்கை
அப்போது விவசாயிகள் பலர் மத்தியக்குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள், கரும்பு, வாழை தோட்டங்களில் தேங்கிய மழை நீர் வடியவில்லை என்றும், இதனால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

Next Story