கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் கடும் பாதிப்பு; பசவராஜ் பொம்மையுடன் மோடி பேச்சு
கர்நாடகம் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசி கேட்டறிந்தார். பின்னர் மோடி, கர்நாடகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
பெங்களூரு:
வரலாறு காணாத மழை
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகளவில் மழை பெய்யும். அத்துடன் சேதங்களும் அதிகமாக இருக்கும். நடப்பாண்டில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்துவிட்டது. நடப்பு ஆண்டில் இந்த பருவமழை காலத்தில் கர்நாடகத்திற்கு தேவையான அளவுக்கு மழை பெய்தது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் நவம்பர் மாதத்தில் மழை பொழிவு என்பது மிக குறைவாகவே இருக்கும்.
அதே வேளையில் வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானால், பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதாவது இதுவரை சராசரியாக 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்யும் மழை அளவை விட 271 சதவீதம் அதிகம் ஆகும்.
கடலோர மாவட்டங்களில் 228 மில்லி மீட்டரும், தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் 186 மில்லி மீட்டரும், மலைநாடு பகுதியில் 174 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. கர்நாடகத்தில் இந்த நவம்பர் மாதம் பெய்த மழைக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். 658 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 495 வீடுகள் பாதி சேதமடைந்து இருக்கின்றன.
5½ லட்சம் ஏக்கரில் விளைபயிர்கள் நாசம்
மழை-வெள்ளத்தில் சிக்கி சுமார் 200 கால்நடைகள் இறந்துள்ளன. 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. 50 ஆயிரம் ஏக்கரில் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 203 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளும், 165 பாலங்களும், 1,225 பள்ளிகளும், 39 ஆரம்ப சுகாதார நிலையங்களும் சேதமடைந்து உள்ளன.
இந்த தொடர் கனமழைக்கு பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தும், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை நின்றும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் விளைபயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. மேலும் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீரை வடியவைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவி
இந்த நிலையில், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலார், சிக்பள்ளாப்பூரில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
அதன்படி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பாதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.3 லட்சமும், சிறிது சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விவசாய பயிர்கள் சேதத்திற்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தற்போது மழை குறைந்துள்ளதால், மழை சேதங்கள் குறித்த ஆய்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை மந்திரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மோடி தொலைபேசியில் பேச்சு
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி மழை சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பயிர் சேதங்கள், வெள்ளத்தில் சாலை- மேம்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது உள்பட அனைத்து விவரங்களையும் பிரதமரிடம் பசவராஜ்பொம்மை விளக்கமாக எடுத்துக் கூறினார்.
மேலும் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கும்படி பசவராஜ் பொம்மை, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உதவிகளை செய்வதாக உறுதி
இதுகுறித்து பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை சேதங்கள் குறித்து என்னை பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து பேசினார். மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பிரதமருக்கு தெரிவித்துள்ளேன்.
மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும்" என்றார்.
Related Tags :
Next Story