பி.டி.ஏ. அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை
பெங்களூருவில் 4 பி.டி.ஏ. அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
முறைகேடு குற்றச்சாட்டு
பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் கடந்த 19, 20-ந் தேதிகளில் பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. மேலும் ரூ.100 கோடி நில ஆவணங்களை ஊழல் தடுப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 அலுவலகங்களில் சோதனை
பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் சோதனை நடந்த பின்னர் அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் அளிப்பது அதிகரித்தது. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிகாரிகள் மீது புகார்கள் அளித்தனர். இதனால் நேற்று பி.டி.ஏ. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் மீண்டும் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு முன்பே 25-ந் தேதி வரை அங்கு சோதனை நடத்த போலீசார் அனுமதி வாங்கி இருந்ததாக கூறப்பட்டது.
இதனால் நேற்று பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எச்.எஸ்.ஆர் லே-அவுட், விஜயநகர், ஆர்.டி.நகர், பனசங்கரியில் உள்ள பி.டி.ஏ. அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாப் ரெட்டி தலைமையில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த 4 அலுவலகங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
கதவுகளை பூட்டினர்
அந்த 4 அலுவலகங்களுக்கும் ஊழல் தடுப்பு படை போலீசார் சென்றதும், 4 அலுவலகங்களின் கதவுகளை பூட்டியதாகவும், அலுவலகத்திற்கு உள்ளே வைத்து அங்கு வேலை செய்யும் அதிகாரிகள், ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் சில ஆவணங்கள் இந்த 4 அலுவலகங்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்ததாலும், பி.டி.ஏ. மீது 30 பேர் புகார் அளித்த நிலையில் அதில் 20 புகார்கள் இந்த 4 அலுவலகங்கள் மீது இருந்ததாலும் இந்த 4 அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story