பர்கூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்
பர்கூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
புது மாப்பிள்ளை
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 38). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், சென்னையை சேர்ந்த கனிமொழி (32) என்பவருக்கும் கடந்த 21-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் தனது மனைவி கனிமொழி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் காரில் பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். காரை சீனிவாசலு ஓட்டி வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நள்ளிரவு 12.10 மணிக்கு கார் சென்றது. அப்போது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சீனிவாசலு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி கனிமொழி படுகாயம் அடைந்தார். இவரது உறவினர்கள் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சுமலதா (30), தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ரிஷிகா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.
சிகிச்சை
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சீனிவாசலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சுமலதா, ரிஷிகா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருணாசலம் (50) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது காரை ஓட்டிய சீனிவாசலு தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து கந்திகுப்பம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story