கும்மிடிப்பூண்டி அருகே லாரி விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து இறால் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை எண்ணூர் துறைமுகத்தை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. லாரியை சென்னை மாதவரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம்(வயது 56) ஓட்டி வந்தார்.
அந்த லாரி நேற்று காலை கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வம் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story