கூட்டமாய் நாய்கள் சுற்றி திரிகின்றன
குமரலிங்கம் பகுதியில் கூட்டம் கூட்டமாய் நாய்கள் சுற்றி திரிகின்றன.
குமரலிங்கம்
குமரலிங்கம் பகுதியில் கூட்டம் கூட்டமாய் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
நாய்கள் தொல்லை
குமரலிங்கம் பகுதியில் வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு நாய்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவை கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் ஒரு விதமான அச்சம் ஏற்படுகிறது. குமரலிங்கம் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களிலும் குறைந்தது 15 நாய்களாவது சுற்றித் திரிகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.
காலை நேரங்களில் குமரலிங்கம் பஸ் நிலையத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலை வழிகளில் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை அச்சத்துடன் ஓட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இவை வாகனங்களின் குறுக்கே விழுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்படுகிறது. மேலும் காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள்பஸ்நிலையம் வருவதால் நாய் கூட்டங்களை கண்டு பயந்து அச்சப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
கட்டுப்படுத்த கோரிக்கை
தெருக்களில் குழந்தைகள் விளையாட அச்சம் கொள்கின்றனர். சாலை ஓரங்களில் உள்ள கறிக்கடை முன்பாகவும் குப்பைத்தொட்டிகள் முன்பாகவும் உணவுக்காக நாய்கள் சண்டையிடும் போது மிகவும் அபாயகரமாக அச்சம் கொள்ளும் வகையிலும் உள்ளது.
தற்சமயம் நாய்களுக்கு கருத்தடை செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது.அவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.அதன் பொருட்டு குமரலிங்கம் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story