மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழும் கோவில் வளாகம்


மதுப்பிரியர்களின் கூடாரமாக  திகழும் கோவில் வளாகம்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:48 PM GMT (Updated: 24 Nov 2021 1:48 PM GMT)

குமரலிங்கம் பகுதியிலுள்ள ஆத்தோர வெங்கடராமர் கோவில் வளாகம் மதுப்பிரியர்களின் கூடாரமாக இருந்து வருகிறது.

குமரலிங்கம் பகுதியிலுள்ள ஆத்தோர வெங்கடராமர் கோவில்  வளாகம் மதுப்பிரியர்களின் கூடாரமாக இருந்து வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தோர வெங்கட் ராமர் கோவில்
குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் ஆத்தோர வெங்கடராமர் கோவில் உள்ளது. இது மிகவும் பழமையான கோவிலாகும். இது தற்போது இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது எந்தவிதமான பராமரிப்பு பணியும் இன்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது.
 இதை ஒட்டியுள்ள பகுதிகளில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அந்தப்பகுதியை சுற்றி வெளியூர் நபர்கள் பொதுக்கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் கோவில் இருக்கும் உ.வே.சா வீதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் கோவிலின் முன்பாக மழைநீருடன் கழிவுநீர்  தேங்கி சாக்கடையாக உள்ளது.
திறந்தவெளி பார்
குமரலிங்கம் பகுதியில் இரவு, பகல் எப்போதும் மது கிடைப்பதால் அதை வாங்கிக் கொண்டு மதுப்பிரியர்கள் இந்த கோவிலின் முன்பாக வந்துவிடுகின்றனர். அங்கேயே கும்பலாக அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். தனி நபர்களாக இருந்தால் அந்தப்பகுதி மக்கள் திட்டி அனுப்பி விடுகின்றனர். 
ஆனால் கூட்டமாக இருப்பதால் அச்சப்பட்டு கொண்டு அதை கண்டுகொள்வதில்லை. அப்படி யாரேனும் அவர்களைக்கேட்டால் மதுபோதையில் கும்பலாக சண்டைக்கு வருகிறார்கள். மது குடித்துவிட்டு ஆங்காங்கே காலி மது பாட்டில்களை உடைத்தும் காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் டம்ளர்கள் ஆகியவற்றை அங்கேயே போட்டும் விடுகின்றனர். காலை 6 மணியிலிருந்து இரவு வரை அந்தப் பகுதி மது பிரியர்களின் வசமாகவே உள்ளது. 
இரவு நேரத்தில் அந்தப்பகுதியில் இருந்த தெருவிளக்கையும் மதுப்பிரியர்கள் உடைத்து விட்டதால் அந்தக்கோவில் முன்பு இருட்டாகவும் உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோவில் முன்பாக அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த குமரலிங்கம் போலீசாருக்கும் கோவில் முன்புறம் சுத்தமாக வைத்துக்கொள்ள குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் இந்துசமய அறநிலை துறைக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story