பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
குண்டடம்,
தாராபுரத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்மழை
தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவதியுற்ற மக்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து போதுமான கால்வாய் அமைத்து தர வலியுறுத்தி 1-வது வார்டு வெற்றி நகர் பகுதியில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது
வெற்றி நகர் பகுதியில் 84க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கனமழையின் காரணமாக மக்கள் பயன்படுத்தும் சாலையானது சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ரேஷன் பொருட்களை பெறச் செல்லும் பொதுமக்கள், நோயாளிகள் வேளாண் பணிக்குச் செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர். எனவே நஞ்சியம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றி நகர் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். மேலும் முறையான கால்வாய் வசதி அமைத்துத் தரவேண்டும்.
ஆக்கிரமிப்பு
வெற்றி நகர் நகராட்சி மற்றும் ஊராட்சி எல்லைப்பகுதியில் இருப்பதால் சாலை அமைப்பதில் கவனம் செலுத்துவது இல்லை. இப்பகுதிக்கு அருகாமையிலுள்ள மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளது.அந்த ஓடையில் மழை நீர் நிறைந்து ஓடையில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெள்ளம் என தெருக்களில் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தீர்வு எட்டப்படாத நிலையில் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story