தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக்கூடாது


தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக்கூடாது
x
தினத்தந்தி 24 Nov 2021 2:06 PM GMT (Updated: 24 Nov 2021 2:06 PM GMT)

தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

வரத்து குறைந்தது

நீலகிரி மாவட்டத்துக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் போன்ற சமவெளி காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இங்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள் சேதமானது. இதனால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் ஊட்டிக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

விலை உயர்வு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு தினமும் 12½ டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது தினமும் 10 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது.  நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஊட்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கடந்த 20-ந் தேதி ரூ.70-க்கு விற்பனையானது. நேற்று ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. சமையலுக்கு அத்தியாவசிய தேவையான தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

பதுக்கி வைக்கக்கூடாது

உழவர் சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.85, வெண்டைக்காய் ரூ.65, சின்ன வெங்காயம் ரூ.48, பெரிய வெங்காயம் ரூ.44, முருங்கைக்காய் ரூ.100, பூண்டு ரூ.150, உருளைக்கிழங்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஒரு கிலோ ரூ.79-க்கு கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளது.

நீலகிரியில் பண்ணை கூட்டுறவு விற்பனை நிலையம் இல்லை. இதனால் மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். விலை உயர்வை பயன்படுத்தி தக்காளிகளை வியாபாரிகள் பதுக்கி வைக்க கூடாது. மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story