அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி இ்ல்லாததால் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி
விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதி இ்ல்லாததால் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
உண்டு உறைவிடப்பள்ளி
ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பழங்குடியின மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கர், பனியர் ஆகிய பழங்குடியின மாணவர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தங்கும் விடுதி, ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி உள்ளது. நீலகிரியில் தொலைதூர இடங்களில் இருந்து தினமும் மாணவர்கள் பள்ளிக்கு சென்ற வர முடியாததால், தங்கி இருந்து படித்து வருகின்றனர்.
தண்ணீர் பிரச்சினை
இதற்கிடையே விடுதியில் மாணவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லை. அன்றாடம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் கழிப்பறை, குளிப்பதற்கு பயன்படுத்த தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதி
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தரம் இல்லாத உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விடுதிகளில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர். பள்ளியை நம்பி குழந்தைகளை அனுப்புகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் வீட்டுக்கு அழைத்து செல்வோம். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பரபரப்பு
மேலும் பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சுகந்தி கூறும்போது, பள்ளி விடுதிக்கு வாடகை லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story