குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
செம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
செம்பட்டி பாண்டியன் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர். மேலும் குப்பைகளை சரியாக அள்ளாததால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சாக்கடை கால்வாய் வசதி, சிமெண்டு சாலை இல்லாததால் மழைக்காலத்தில் குளம் போல தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. அந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
இந்தநிலையில் தங்களது பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாண்டியன் நகர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் நகர் மக்கள் செம்பட்டி-மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செம்பட்டி பாண்டியன்நகர் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story