மாவட்ட செய்திகள்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு + "||" + Collaboration to pay for the corona vaccine for all

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு
சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம் ஒன்றியத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
சங்கராபுரம், 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு வரவேற்றார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, வடகிழக்கு பருவமழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவரிராஜன், ஜெகநாதன், அய்யப்பன், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால் சித்ரா மற்றும் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ரிஷிவந்தியம் 

ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு                    தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆதி.கு.கோவிந்தராஜு, அமிர்தம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் பணியாளர்கள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
பின்னர், ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் செய்வது, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு, அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சின்னசேலம்

சின்னசேலத்தில் நடை பெற்ற ஒன்றியக்குழு கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குமரவேல் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் நூர்முகமது தீர்மானங்களை வாசித்தார். சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றி தெரிப்பது, கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு அறிவுரையின்படி அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக வடிகால்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும், குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியுள்ள மழை நீரை அகற்றநடவடிக்கை எடுப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் மேல்நாரியப்பனூர் சுதா மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், ஒன்றிய பொறியாளர் ராமு மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி நன்றி கூறினார்.