அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்


அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:39 PM IST (Updated: 24 Nov 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அலுவலர்களுக்கு பொன்.கவுதமசிகாமணி எம்.பி. அறிவுரை கூறினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்புக்குழு தலைவர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. பேசியதாவது:-
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் நோக்கம், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 

பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் 

இந்த கண்காணிப்புக்குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை தலைவராக அப்பகுதிக்குட்பட்ட மற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், குழு உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள். இக்குழுவானது அனைத்து திட்ட பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்தல், திட்டசெயல்பாடுகளின் இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிதல், மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல், முன்னுரிமை பணிகளுக்கு இடம் மற்றும் நிலம் ஆகிய வசதிகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், தேசிய திட்டங்கள் குறித்து மாவட்ட திட்டக்குழுவிற்கு வழிகாட்டுதல், குறிக்கோள்களை உரிய கால அளவிற்குள் முடித்தல், மத்திய மாநில அரசால் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட நோக்கங்கள் கொண்டு செயல்படுகிறது.

பணிகள் விரைந்து...

குறிப்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராம திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா, பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், தீனதயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையில் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பொறுப்புணர்வுடன் செயல்பட... 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் இலக்குகளை மேற்கொள்ள துறை தலைவர்கள் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்படும் திட்டங்களை, துறை அலுவலர்கள் முக்கியத்துவம் அளித்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் பொறுப்புணர்வுடன் விரைந்து செயல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 
கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மணி, திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தேவநாதன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story