ஊசூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்


ஊசூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:47 PM IST (Updated: 24 Nov 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஊசூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை

ஊசூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஏரி நிரம்பவில்லை

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள மலை பகுதிகளில் இருந்து மழை நீர் அத்தியூர் மலை அடிவாரங்களில் உள்ள கால்வாய்கள் வழியாக ஊசூர், பூதூர், சேக்கனூர், அத்தியூர் ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. மலையடிவாரங்களில் இருந்து வரும் மழைநீர் கால்வாய் மூலமாக கலங்கமேடு, சிவநாதபுரம், அத்தியூர் ஆகிய கிராமங்கள் வழியாக பூதூர் ரெண்டேரிகோடி ஏரி, தெள்ளூர் ஏரி, ஊசூர் ஏரி மற்றும் சேக்கனூர் ஏரிக்கும் தண்ணீர் செல்கிறது. 

தற்போது பெய்த தொடர் மழையால் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஊசூர் ஏரி, பூதூர் ஏரி, தெள்ளூர் ஏரி நிரம்பி கோடிபோனது. ஆனால் சேக்கனூர் ஏரிக்கு தண்ணீர் குறைவாக செல்வதால் ஏரி இன்னும் நிரம்பவில்லை. கால்வாய்கள் தூர் வராமல் இருப்பது மற்றும் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுகிறது.

 இதுகுறித்து ஏரி பாசன சங்க தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ.விடம் முன்னதாக மனு அளித்திருந்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்து நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்‌. 

சாலை மறியல்

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏரி பாசன சங்க தலைவர் வேணுகோபால், சங்க உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் நேற்று வேலூர்- அணைக்கட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் கலால் உதவி ஆணையர் வெங்கட்டராமன், தாசில்தார் பழனி, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதிசுரேஷ்பாபு, தேவிசுரேஷ், விஜயகுமாரிகண்ணன், வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, ஊராட்சி செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினர். 

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story