“என் மகனும் ராணுவ பணியை லட்சியமாக கொண்டுள்ளான்”
‘வீர சக்ரா’ விருது என் கணவரின் தியாகத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், என் மகனும் ராணுவ பணியை லட்சியமாக கொண்டுள்ளான் எனவும் ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி உருக்கமாக கூறினார்.
ராமநாதபுரம்,
‘வீர சக்ரா’ விருது என் கணவரின் தியாகத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், என் மகனும் ராணுவ பணியை லட்சியமாக கொண்டுள்ளான் எனவும் ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி உருக்கமாக கூறினார்.
வீர மரணம்
இந்திய எல்லையான லடாக்கில் சீன படைகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு ‘வீர சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பழனியின் மனைவி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து வானதிதேவி கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன படையினரை விரட்டியடிக்க கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஆபரேஷன் பனிச்சிறுத்தை என்ற இந்த நடவடிக்கையில் எனது கணவர் பழனி உள்பட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
வீரசக்ரா விருது
என்னுடைய கணவர் பழனி தனது கடைசி மூச்சுவரை துணிச்சலுடன் போரிட்டு தாய் நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்தார். தமிழகத்திற்கு பெருமையை தேடித்தந்தார். அவரின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக நாட்டின் மிக உயரிய ‘வீர சக்ரா’ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. எனது கணவருக்கு கிடைத்த இந்த கவுரவத்தால் பெருமிதம் அடைகிறேன்.
அவர் மறைந்தாலும் நாட்டின் மிகப்பெரிய அங்கீகாரத்தை எங்களுக்கு பெற்றுத்தந்துள்ளார். எனது கணவரின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். எனது மகன் பிரசன்னாவும் (வயது 11) தந்தை வழியில் ராணுவ பணியில் சேர்ந்து, நாட்டுக்கு கடமையாற்ற வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளான்.
இவ்வாறு அவர் உருக்கமுடன் கூறினார்.
Related Tags :
Next Story