பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர் குழப்பம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
தொடர் மழை
வங்க கடலில் தெற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை மழையின்றி காணப்பட்ட நிலையில் முன்தினம் இரவு முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது. சில நேரம் சாரல் மழையாகவும், இரவு நேரங்களில் கனமழையாகவும் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் நீர்வழிபாதைகளை நிரப்பி வீடுகள் கட்டி உள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மழைநீர்
இதன்காரணமாக நீர்நிலைகளில் கட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடுகள் மற்றம் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல நிற்கிறது. இந்த மழைநீரில் வேறுவழியின்றி நடந்து சென்ற பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழை நேற்றும் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் தொடர்ந்து குழப்பமான நிலையே நீடித்து வருகிறது. மழைபெய்து வருவதால் அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலைக்கேற்ப விடுமுறை விட்டுக்கொள்ளலாம் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படுகிறது.
விடுமுறை
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என்றும் ஆசிரியர்கள் வந்துவிட்டதால் நடத்துவோம் என்றும் மாணவர்கள் வந்துவிட்டதால் செல்வது சிரமம் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் அனைத்து பகுதிகளிலும் குழப்பம் நீடித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் விடுமுறையா இல்லையா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு செய்யாததால் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர்.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- ராமநாதபுரம்-32.4, மண்டபம்-33.6, ராமேசுவரம்-54.2 தங்கச்சிமடம்-40.6, பள்ளமோர்குளம்-35.5, திருவாடானை-35.2, தொண்டி-4, ஆர்.எஸ்.மங்கலம்-26.8, பரமக்குடி-12.8, முதுகுளத்தூர்-33.2, கமுதி-6, கடலாடி-45.8, வாலிநோக்கம்-35.2, சராசரி-26.68.
Related Tags :
Next Story