மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியர். பள்ளியை பெற்றோர் முற்றுகை


மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியர். பள்ளியை பெற்றோர் முற்றுகை
x
தினத்தந்தி 24 Nov 2021 5:58 PM GMT (Updated: 24 Nov 2021 6:00 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, தாக்கிய ஆசிரியரை கண்டித்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, தாக்கிய ஆசிரியரை கண்டித்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இடைக்கால ஆசிரியர்

ஜோலார்பேட்டைைய அடுத்த கட்டேரி ஊராட்சியில் பக்கிரிதக்கா அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதில் பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் பாஸ்கரின் மகன் திருவினேஷ் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறான். 

அந்தப் பள்ளியில், அங்குள்ள ஜெய்பீம் நகர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவரும் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவருமான ஆறுமுகம் (வயது 40) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடைக்கால ஆசிரியராக (டெபுடேஷன்) பணியில் சேர்ந்தார்.

தோப்புக்கரணம்

திருவினேஷ், ஆசிரியர் ஆறுமுகத்திடம் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறினான். அவனை, ஆசிரியர் கழிவறைக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு மாணவன் வகுப்பு அறைக்கு திரும்பினார். வகுப்புக்கு திரும்பிய திருவினேசை ஆசிரியர் ஆறுமுகம் 100 தடவை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால் கால் வலியால் துடித்த மாணவனை ஆசிரியர் சரமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல் சூர்யா மற்றும் லட்சனா ஆகிய மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்றதால் அவர்களையும் 100 தடவை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். ஆனால் அவர்கள் தோப்புக்கரணம் போடாததால் பிரம்பால் சரமாரியாக தாக்கினார். 

முற்றுகை

இதுகுறித்து அந்தந்த மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறி அழுதனர். ஆத்திரம் அடைந்த பெற்றோர் கிராம மக்களுடன் நேராக பள்ளிக்கு திரண்டு வந்து, மேற்கூறிய சம்பவத்தை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

இதையறிந்த அறிந்த ஆசிரியர் ஆறுமுகம், 2 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை, எனத் தெரிகிறது. 20-க்கும் மேற்பட்டோரும், பெற்றோரும் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டு, ஆசிரியர் ஆறுமுகம் உடனடியாக பள்ளிக்கு வரவேண்டும, அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனகூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story