குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைப்பு
பிணைய பத்திர உறுதிமொழியை மீறி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குளித்தலை,
கொலை வழக்கில் கைது
குளித்தலை அருகே உள்ள தெற்கு மாடுவிழுந்தான்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 34). இவர் கடந்த 2020-ம் ஆண்டு குளித்தலை அருகே உள்ள நச்சலூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த மார்ச் மாதம் இவர் நச்சலூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் இவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குளித்தலை கோட்டாட்சியரின் விசாரணை ஈடுபடுத்தினர்.
பிணைய பத்திரம் ரத்து
அப்போது ஒரு வருட நன்னடத்தை பிணைய பத்திரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முருகானந்தம் பிணைய பத்திரத்தின் உறுதிமொழி அளித்தவாறு நடந்து கொள்ளாமல் விதிமுறைகளை மீறி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கிலும், அதேபோல லாலாபேட்டை பகுதியில் வழிப்பறி செய்த வழக்கிலும் சிறை சென்றுள்ளார்.
பிணைய விதிமுறையை மீறி நடந்து கொண்ட இவரது பிணையத்தை ரத்து செய்ய வேண்டும் என குளித்தலை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் குளித்தலை கோட்டாட்சியருக்கு கடிதம் அளித்துள்ளார்.
சிறையில் அடைப்பு
அதனடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்திய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி விசாரணையின்றி வரும் 7-3-2022 வரை முருகானந்தத்தை மெய் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி குளித்தலை போலீசார் முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story