மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது + "||" + Teacher arrested for sexually harassing students

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த மாணவி கொடுத்த புகார் மீது தலைமை ஆசிரியை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். 
பள்ளி முற்றுகை
இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டதன்பேரில், அரியலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில் ேபாலீசார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்சோ சட்டத்தில் கைது
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியதுடன், நீங்கள் தான் தவறு செய்தீர்கள் என்று கூறியதாக ெதரிகிறது. ஆனால், மாணவிகள் தாங்கள் தவறு செய்யவில்லை என்று உறுதிபட கூறினர்.
விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.