காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடந்தது.
நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடு முழுவதும் மக்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தப்படுகிறது.
அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாளையங்கோட்டையில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகம் முன்பு தொடங்கிய பேரணியானது போலீஸ் கட்டுப்பாட்டு அறை முன்பு முடிவடைந்தது.
காந்திய வழியில்...
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் கவிபாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ரெயில்வே கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் காந்திய வழியில் தலையில் தொப்பி அணிந்து மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.
பா.ஜனதா
பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கூறுகையில், ‘மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. பா.ஜனதா அரசு மக்களுக்கான அரசாக செயல்படவில்லை. இது பெருவணிக தனியார் நிறுவனங்களின் அரசாக செயல்படுகிறது’ என்றார்.
Related Tags :
Next Story