பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்
சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையைநீக்க கோரி சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையைநீக்க கோரி சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டாசு தொழில்
தற்போது சுற்றுச்சூழல் மாசுவை காரணம் காட்டி பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்க கூடாது என்றும், சரவெடிகள் உற்பத்தி செய்யக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையிலும் பட்டாசு ஆலைகள் திறக்கவில்லை. இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம், தொழிலாளர்கள் கேட்ட போது பட்டாசு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்காத காரணத்தால் பட்டாசு உற்பத்தியை தொடங்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் 95 சதவீத பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளது.
போராட்டம்
பட்டாசு ஆலைகள் திறக்கப்படாத நிலையில் அதில் பணியாற்றி வந்த பல லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை மீனம்பட்டி பகுதியை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளை திறக்க கோரியும், சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் காலை 9.30 மணிக்கு அந்த பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் மீனம்பட்டிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர்
அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜீவா, சமுத்திரம் ஆகியோர் பட்டாசு தொழிலாளர்களிடம் சமாதானம் பேசினர்.
சரவெடிக்கு எதிரான தடையை சுப்ரீம் கோர்ட்டு விதித்து இருப்பதால் உரிய நடவடிக்கைக்கு பின்னர் தான் தடையை நீக்க முடியும். இது குறித்து மாவட்ட அமைச்சர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் எடுத்து கூறி தடையை நீக்க தேவையான ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்த்தனர்.
இந்த பேச்சு வார்த்தை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கோரிக்கை மனுவில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு 10.30 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story