பாவூர்சத்திரம் அருகே கேரள கழிவுகளை கொட்டி தீ வைப்பு
பாவூர்சத்திரம் அருகே மடத்தூரில் கேரளாவில் உள்ள கழிவுகள் கொட்டி தீ வைக்கப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மடத்தூரில் கேரளாவில் உள்ள கழிவுகள் கொட்டி தீ வைக்கப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர்.
கழிவுகளை கொட்டி தீ வைப்பு
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ளது மடத்தூர். இந்த ஊரில் இருந்து திருமலாபுரம் ஊர் வழியாக சிவநாடானூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஓரங்களில் பல நாட்களாக கேரளாவில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களின் கழிவுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.
இந்தக் கழிவுகளை அவ்வப்போது மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நச்சுப்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இதுபோல் கழிவுகளைக் கொட்டி வைத்து செல்வதும், அவ்வப்போது தீவைத்து எரிப்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனையிட வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story