பூட்டை உடைத்து பாதாள அறைைய திறந்து சிலைகளை வெளியே எடுத்த அதிகாரிகள்
பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
கொட்டாம்பட்டி
பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
அகத்தீசுவரர் கோவில்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை கிராமத்தில் பழமையான அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 13-ம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.
சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணத்தை காண கயிலையில் தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் ஒன்று கூடியதால் வடக்கு பகுதி தாழ்ந்தும், தென்பகுதி உயர்ந்ததாகவும், இதனை சரி செய்ய அகத்தியரை நாட்டின் தென்பக்கம் அனுப்பி இறைவன் சமநிலைபடுத்தியதாகவும் ஐதீகம்.
அவ்வாறு அகத்தியர் வந்த போது, திருச்சுனை கிராமத்தில் உள்ள பாறையில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு அங்குள்ள சுனையில் நீர் அருந்தினார் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தலம் தான் திருச்சுனை அகத்தீசுவரர் கோவிலாக பிற்காலத்தில் மாறியது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது.
பாதாள அறை
அறநிலையத்துறை சார்பில் பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து மதுரை மண்டல அறநிலையத்துறை அதிகாரிகள், திருச்சுனை அகத்தீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை தொடங்கினர். இதற்காக கோவிலை ஆய்வு செய்தபோது உற்சவர்கள் சிலைகள் இல்லாமல் இருந்ததும், கோவில் கருவறை அருகே ரகசிய பாதாள அறை ஒன்று இருந்ததும் தெரியவந்தது. இந்த அறை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
இதனையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் அய்யம்பெருமாள், இந்து சமய மேலூர் வட்டார அதிகாரி வாணி மகேசுவரி, துணை தாசில்தார் பூமாயி, மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் முன்னிலையில் அறநிலையத்துறையினர் கோவிலின் ரகசிய அறை பூட்டை உடைத்து திறந்தனர்.
சிலைகள் எடுக்கப்பட்டன
இதனையடுத்து அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பழமை வாய்ந்த மூஷிக வாகன விநாயகர் மற்றும் சண்டிகேசுவரர், அம்மன் சிலைகளும், சூலாயுதம், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களும் அங்கிருந்தன. அவை எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டன..
தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே பாதாள அறையில் இருந்து எடுத்த சிலைகள் எந்த காலத்தில் செய்யப்பட்டது, எந்த உலோகத்தால் ஆனது? என்பது தெரியவரும் என உதவி ஆணையர் விஜயன் தெரிவித்தார்.
பக்தர்கள் குவிந்தனர்
கோவிலின் ரகசிய பாதாள அறை திறக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாகவும் காணப்பட்டது.
Related Tags :
Next Story