காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி


காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Nov 2021 2:02 AM IST (Updated: 25 Nov 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்த நிலையில் பண்ணை பசுமை கடையில் ரூ.90-க்கு விற்கப்பட்டது. மற்ற தஞ்சை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. அதிகஅளவில் கொட்டி தீர்த்த மழையால் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காய்கறிகள் முற்றிலும் அழுக தொடங்கி உள்ளன. சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளதால் விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலத்தில் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.20 முதல் ரூ.25க்கும், சிறு சந்தைகளில் ரூ.10-க்கும் தக்காளி விற்பனையானது. ஆனால் மழைகாலம் தொடங்கியவுடன் தக்காளியின் விலை மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது மொத்த விற்பனை கடைகளிலேயே கிலோ ரூ.120-க்கு விற்க தொடங்கி உள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் இதை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி வரத்து குறைவு
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் குழந்தை ஏசு கோவில் அருகே செயல்பட்டு வரும் காமராஜர் தற்காலிக மார்க்கெட்டிற்கு ஆந்திரா, ஓசூர், உடுமலைப்பேட்டை, கர்நாடகம், பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரு நாளைக்கு 50 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்தும் மிகவும் குறைந்துள்ளது.10 டன்னுக்கும் குறைவாக தக்காளி வரத்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்குவதற்காக வந்த இல்லத்தரசிகள் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் குறைந்த அளவும், சிலர் தக்காளி வாங்காமலும் சென்றனர். சில்லறை கடைக்காரர்களும் விலையை கேட்டு விட்டு வாங்காமல் சென்றனர். இந்தநிலையில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விலை குறைவு
இதனால் தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி வளாகத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட் மற்றும் பிற கடைகளை விட குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் வந்து தக்காளியை வாங்கி சென்றனர்.

Next Story