பெங்களூருவில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பு கட்டிட உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி


பெங்களூருவில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பு கட்டிட உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2021 2:36 AM IST (Updated: 25 Nov 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பு கட்டிட உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

மக்களின் குறைகள்

  பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் எலகங்காவில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக கேந்திரிய விகார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வெள்ளத்தில் மிதந்ததை அடுத்து அங்கு வசித்து வந்த மக்களை மீ்ட்பு படையினர், ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் அந்த குடியிருப்பின் மேல்மாடிகளில் வசிப்பவர்களுக்கு பால், காய்கறி, உணவு பொருட்கள் மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்டது. அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

  இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் வெள்ளம் வடிந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று 2-வது நாளாக இந்த ஆய்வு பணியை மேற்கொண்டார். கே.ஆர்.புரத்தில் உள்ள பி.டி.எஸ். நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  பெங்களூரு கே.ஆர்.புரத்தில் மழை அதிகமாக பெய்யும்போது, இங்குள்ள கால்வாயில் அதிகளவில் வெள்ளம் ஏற்படுகிறது. இந்த பகுதி எம்.எல்.ஏ.வான நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், நேரில் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளார். எலகங்கா, ஹெப்பால் ஏரி நீர் கே.ஆர்.புரம் வழியாக தான் செல்கிறது. கே.ஆர்.புரத்தில் 5 லே-அவுட்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கால்வாய் குறுகியதாக உள்ளது. அதனால், இந்த கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கால்வாய் ரெயில்வே நிலத்தில் உள்ளது. இதற்கு ரெயில்வே துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த அனுமதியை பெறுவோம்.

  இந்த கால்வாய் தண்ணீரை கல்கேரி ஏரியில் போய் விட வேண்டும். அந்த பணிகளை மேற்கொள்வோம். நாகேனஹள்ளி கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஹெப்பால் கால்வாயில் சேர்க்கப்படும். அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை பரிசீலிப்போம். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதை அகற்றும் முன்பு கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்படும். ஏனென்றால் அவர்கள் அதை நம்பி வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதை அரசு பரிசீலிக்க வேண்டும் அல்லவா?.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story