முன்னாள் மந்திரி பாலியல் வழக்கு: போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மீது விசாரணைக்கு உத்தரவு - பெங்களூரு கோர்ட்டு அதிரடி
முன்னாள் மந்திரி பாலியல் வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மீது விசாரணை நடத்த பெங்களூரு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கற்பழிப்பு புகார்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இந்த நிலையில் இவர் மீது இளம்பெண் ஒருவர் சார்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யவில்லை.
அதாவது, இளம்பெண் நேரடியாக வந்து புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ரமேஷ் ஜார்கிகோளி தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி தனது புகாரை வாபஸ் பெற்றிருந்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த நிலையில் ஆதர்ஷ் அய்யர் என்பவர் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், நிர்பயா சட்ட விதிப்படி கற்பழிப்பு புகார் கொடுத்தும் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித், கப்பன் பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாருதி ஆகிய 3 பேர் மீதும் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் ரிட் மனு
இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உள்ளிட்ட 3 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனு இன்று (வியாழக்கிழமை) கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story