16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஆனைமடுவு அணை-வசிஷ்ட நதியில் உபரிநீர் திறப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஆனைமடுவு அணை-வசிஷ்ட நதியில் உபரிநீர் திறப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Nov 2021 9:33 PM GMT (Updated: 24 Nov 2021 9:33 PM GMT)

வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் பாசன விவசாயிகள் மற்றும் ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழப்பாடி:

ஆனைமடுவு அணை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. 67.25 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கலாம்.  
இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்து கோம்பை, சி.என். பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்து 11 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணை பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர் பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன.
அணை நிரம்பியது
கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஆனைமடுவு அணை நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. 
இந்நிலையில் கடந்த அக்டோபர் மற்றும் இந்த மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 65.45 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர், அணையின் பிரதான மதகு வழியாக உபரி நீராக வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணை நிரம்பியதோடு, அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள் மட்டுமின்றி, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story