‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:33 AM GMT (Updated: 25 Nov 2021 8:33 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

செய்தி வந்தது, வெளிச்சம் கிடைத்தது

காஞ்சீபுரம் மாவட்டம் மலையம்பாக்கம் ஊராட்சி அம்பேத்கர் தெருவில் மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் வெறும் காட்சி பொருளாக இருப்பதும், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் மேற்கொள்ளும் சிரமங்களும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தியாக வெளியானது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட தெருவில் உள்ள தெருவிளக்குகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த விரைவான நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கும், ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பம் உடனடி அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் போஸ்ட் கபிலர் நகர் தீரன் சிவலிங்கம் குறுக்குத்தெருவில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் காட்சியளித்து கொண்டிருந்த மின்கம்பம் குறித்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டு உள்ளது.

ஏரியை சுற்றி குப்பைகள் அகற்றம்



அம்பத்தூர் அயப்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது, இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தியாக வெளியானது. இதையடுத்து தேங்கி கிடந்த அந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டதுடன், குப்பைகள் சூழ்ந்திருந்த இடத்தில் பிளிச்சீங் பவுடரும் தூவப்பட்டு இருக்கிறது.

பஸ் நிலைய மேற்கூரை சீரானது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பாரத் தியேட்டர் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை சேதமடைந்தும், இருக்கைகள் உடைந்திருப்பதும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தியாக வெளியானது. இதையடுத்து சேதமடைந்த பஸ் நிறுத்த மேற்கூரையும், உடைந்திருந்த இருக்கைகளும் உடனடியாக சீரமைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

அலட்சியம் வேண்டாமே...

சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலை வேளையில் நடைபயிற்சியின்போதும் சரி, மாலை வேளைகளில் பொழுதை கழிக்க மணற்பரப்பில் கூடும்போது சரி பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிவதே கிடையாது. கொரோனா ஓய்ந்துவிட்டது போல பொதுமக்கள் காட்டி வரும் இந்த அலட்சியம் வேதனை அளிக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்துவர கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நிலைமை சீராகும் வரை மெரினா போன்ற லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களில் சில காலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

- நல்லமுனி, சாலிகிராமம்.

சூழ்ந்து கிடக்கும் மழைநீரும், மக்கள் அவதியும்...



சென்னையில் பெருமழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் பல இடங்களில் மழைநீர் வடியாத நிலையே இருக்கிறது. சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்தியாநகர் 3-வது தெருவில் மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இது பல்வேறு நோய்களுக்கும் காரணியாக இருந்து வருகிறது. தினமும் மழைநீரில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஆர்.வளையாபதி, நெசப்பாக்கம்.

முறிந்து விழும் நிலையில் மரம்

சென்னை கோடம்பாக்கம் சாமியார் மடம் பெட்ரோல் பங்க் காம்பவுண்டை ஒட்டிய சுப்புராயன் நகர் 5-வது தெரு பெயர் பலகையை ஒட்டி வளர்ந்துள்ள ஒரு பெரிய மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.

- பொதுமக்கள், சாமியார் மடம்.

மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம்



சென்னை நெற்குன்றம் நியூ காலனி பெருமாள் கோவில் 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் அடிப்பகுதி கம்பிகள் வெளியே தெரியும்படி துருப்பிடித்து போயிருக்கிறது. மேலும் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் போயிருக்கிறது. இதனால் அந்த மின்கம்பம் சற்று அபாயகரமான நிலையிலேயே காட்சி தருகிறது. இந்த கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பத்தை அங்கு நட ஆவன செய்யப்படுமா?

- பொதுமக்கள், நியூ காலனி.

குழாய் இருக்கு... தண்ணீர் வரல...

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் காந்திநகர் 3-வது தெருவில் உள்ள குழாய்களில் 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வருவதே கிடையாது. இதனால் நாங்கள் பக்கத்து தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்கிறோம். இதுகுறித்து கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகளின் அலட்சிய பேச்சு எங்களை மேலும் நோகடிக்கிறது. தண்ணீர் வராத காரணத்தால் தெருவில் உள்ள குழாய்களும் துருப்பிடித்து பழுதாக தொடங்கியிருக்கின்றன. இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், காந்திநகர் 3-வது தெரு.

சாலை வசதி செய்து தரப்படுமா?



காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சந்தோஷ் அவென்யூ விரிவாக்கம் பகுதியில் (சார் பதிவாளர் அலுவலகம் அருகே) முறையான சாலை வசதி அமைத்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமடைவதால், அந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகள் விழி பிதுங்குகிறார்கள். மேலும் இப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லை. எனவே சாலை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருக்கிறது.

- பொதுமக்கள், குன்றத்தூர்.

Next Story