உதவி கேட்டு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய மூதாட்டி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் விசாரணை


உதவி கேட்டு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய மூதாட்டி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2021 9:42 AM GMT (Updated: 25 Nov 2021 9:42 AM GMT)

உதவி கேட்டு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதிய மூதாட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 35-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கவுசல்யா (வயது 67). இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் அவர், “என்னுடைய கணவர் ரங்காச்சாரி (75) கடந்த 9-ந்தேதி உடல்நலமின்றி காலமானார். இதனால் நான், மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட என்னுடைய மகனுடன் வசித்து வருகிறேன். எனக்கு உதவிட வேண்டும்” என கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த கடிதத்தை படித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை தொடர்பு கொண்டு அந்த மூதாட்டிக்கு நேரில் சென்று உதவி செய்யும்படி உத்தரவிட்டார்.

அதன்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன், நங்கநல்லூரில் உள்ள கவுசல்யா வீட்டுக்கு நேரில் சென்று அவரது கடிதம் குறித்து விசாரித்து, அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ரூ.10 ஆயிரம் நிதி உதவியையும் மூதாட்டி கவுல்சயாவிடம் அமைச்சர் வழங்கினார். அப்போது அமைச்சர், “மேலும் எந்த வகையான உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளூங்கள். செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார். அதற்கு கவுல்சயா, தங்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் மகனுக்கு ஒரு வேலையும் வேண்டும் என்றார். அதற்கு தேவையான உதவி செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் கவுன்சிலர்கள் என்.சந்திரன், ஏசு, நடராஜன் ஆகியோர் சென்றனர்.

இது பற்றி மூதாட்டி கவுசல்யா கூறும்போது, “முதல்-அமைச்சர் வீட்டுக்கு எனது நிலைமை குறித்து கடிதம் எழுதினேன். அந்த கடிதம் எழுதிய 10 நாளில் அமைச்சரை அனுப்பி உதவிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்றார்.

Next Story