திருவள்ளூர் அருகே மழை விட்டும் 10 நாட்களாக தேங்கி நிற்கும் வெள்ளம்
திருவள்ளூர் அருகே மழை விட்டும் 10 நாட்களாக தேங்கி நிற்கும் வெள்ளம் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
திருவள்ளுர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் சக்தி நகர் பகுதியில் 150 குடியிருப்புகள் உள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக காக்களூர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல உள்ளது. அருகே உள்ள சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் இடுப்பளவு கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சமைக்க இடம் இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நிலத்தடி நீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. வீடும் 10 நாட்களாக வெள்ளம் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
அங்குள்ள பொதுமக்கள் வெளியே சென்று வர தெர்மோக்கோல் மூலம் செய்யப்பட்ட தற்காலிக படகுகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்பை காலி செய்து மாற்று இடத்துக்கு சென்று விட்டனர்.
தண்ணீரை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏரி நிரம்பி தொழிற்சாலை கழிவுகள் கலந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து இருப்பதால் ஏரியிலிருந்து உபரி நீரை திறந்து விட்டால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் நீர் வடிய வாய்ப்பிருப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.
எனவே காக்களூர் சக்தி நகர்ப்பகுதியில் தேங்கியிருக்கும் பாசிபடர்ந்த தண்ணீரை வெளியேற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story