வடமதுரை அருகே தனியார் நூற்பாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வடமதுரை அருகே தனியார் நூற்பாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள முத்தனாங்கோட்டையில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை எதிரில் கடந்த 19-ந்தேதி புதிய மின்கம்பம் நடப்பட்டு உயர் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்போது நூற்பாலையின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் மின்கம்பம் அருகே சென்ற கேபிள் வயர்கள் உருகி துண்டிக்கப்பட்டது. அங்குள்ள கடை ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள 10 மின்கம்பங்களில் தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வடமதுரை மின்வாரிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தனியார் நூற்பாலை முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதை நூற்பாலையின் அருகே உள்ள இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story