வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்
வெளிநாடு தப்பிசென்றுவிட்டதாக கூறப்பட்ட முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.
மும்பை,
வெளிநாடு தப்பிசென்றுவிட்டதாக கூறப்பட்ட முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.
வெளிநாடு தப்பினார்
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், வெடிகுண்டு கார் வழக்கில் அவருக்கு கீழ் வேலை பார்த்த உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே சிக்கியதை அடுத்து ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர், மாநில உள்துறை மந்தியாக இருந்த அனில்தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இதனால் அவர் மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.
அதன்பிறகு பரம்பீர் சிங் மிரட்டி பணம் பறித்ததாக தானே, மும்பை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவானது. அதே நேரத்தில் கடந்த மே மாதம் முதல் பரம்பீர ்சிங் பணிக்கு வராமல் இருந்தார்.
இதேபோல போலீசார், கோர்ட்டு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பரம்பீர் சிங் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. மேலும் மும்பை கோர்ட்டு பரம்பீர் சிங்கை பிரகடனப்படுத்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரம்பீர் சிங்கை 6 குற்ற வழக்குகளில் கைது செய்ய மராட்டிய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு உத்தரவிட்டது.
மும்பை வந்தார்
இதற்கிடையே நேற்று முன்தினம் செய்தி சேனல் ஒன்றில் பேசிய பரம்பீர் சிங் தான் வெளிநாடு தப்பி செல்லவில்லை, சண்டிகரில் இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில் நேற்று அவர் சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அவர் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோர்ட்டு உத்தரவை அடுத்து பரம்பீர் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார்" என்றார்.
மந்திரி நவாப் மாலிக் கருத்து
இந்தநிலையில் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தான் பரம்பீர் சிங் வெளியே வந்து இருப்பதாக மராட்டிய மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இன்று பரம்பீர் சிங் மும்பைக்கு வந்தது அவா் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டதன் தேவையை உறுதிப்படுத்தி உள்ளது. மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்த பிறகு அவர் பணிக்கு வரவில்லை. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் கூறியதை யாரும் நம்ப மாட்டார்கள்." என்றார்.
Related Tags :
Next Story