குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 25 Nov 2021 1:51 PM GMT (Updated: 25 Nov 2021 1:51 PM GMT)

முதுமலை-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

கூடலூர்

முதுமலை-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலை

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது தவிர கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதியாக உள்ளதால் அந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதுமலையில் உள்ள தெப்பக்காட்டில் இருந்து கூடலூர், நடுவட்டம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. 

அதிகளவில் வாகன இயக்கம்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மாநிலங்களுக்கிடையே பொதுப்போக்குவரத்து நடைபெறாமல் இருந்தது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தது. இதனால் வாகன போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. 

அப்போது சாலை பழுதடைந்து காணப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் இருந்து கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. 

சீரமைக்க வேண்டும்

மேலும் கடந்த சில மாதங்களாக கூடலூர் பகுதியில் பருவமழை பெய்து வருவதால் சாலை மேலும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி ஆகிய இடங்களில் சாலையில் பாதாள குழிகள் காணப்படுகிறது. 

இதில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் உற்பத்தியாகும் கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story