ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை


ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
x
தினத்தந்தி 25 Nov 2021 7:21 PM IST (Updated: 25 Nov 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கிலோ ரூ.70-க்கு கிடைக்கிறது.

ஊட்டி

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கிலோ ரூ.70-க்கு கிடைக்கிறது.

தக்காளி வரத்து குறைந்தது

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சமவெளி பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் சேதமடைந்து, பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு தக்காளி வரத்து குறைந்தது. 

இதனால் நேற்று முன்தினம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், உழவர் சந்தையில் ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பின்படி ஊட்டியில் நேற்று முதல் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரேஷன் கடையில் விற்பனை

அதன்படி ஊட்டியில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வினியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த விற்பனையை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் சரவணன், துணைப் பதிவாளர் கணபதி சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூட்டுறவு துறையின் கீழ் ஊட்டி நகர பகுதிகளில் செயல்பட்டு வரும் 10 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தக்காளி வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு தக்காளி வாங்கி சென்றனர். 

பொதுமக்கள் நிம்மதி

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, முதல் கட்டமாக 10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. அதன் விற்பனையை பொறுத்து மேலும் 47 கடைகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மொத்த வியாபாரிகளிடம் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது என்றனர். 

நேற்று ஊட்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ரூ.80 முதல் ரூ.90 வரை தக்காளி விற்பனையானது. தக்காளி விலை சற்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


Next Story