மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டாஸ்மாக் ஊழியர் சாவு
அய்யன்கொல்லி அருகே சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டாஸ்மாக் கடை ஊழியர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
பந்தலூர்
அய்யன்கொல்லி அருகே சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டாஸ்மாக் கடை ஊழியர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
டாஸ்மாக் கடை ஊழியர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ள மாதமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 43). இவர் கொளப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி விஜயஸ்ரீ(33).
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கணவன்-மனைவி 2 பேரும் கொளப்பள்ளி ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
மனைவிக்கு தீவிர சிகிச்சை
அய்யன்கொல்லி அருகே உள்ள கள்ளிச்சாலில் இறக்கமான சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சவுந்தரராஜன் மற்றும் விஜயஸ்ரீ ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சவுந்தரராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி விஜயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story