திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நாள் முழுவதும் நீடித்த கன மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று நாள் முழுவதும் கனமழை பெய்தது. பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நன்னிலம்:-
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று நாள் முழுவதும் கனமழை பெய்தது. பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று நாள் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. பல மணிநேரம் நீடித்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கன மழை எதிரொலியாக நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொடர் கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து 2-வது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
நன்னிலம்
நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பல மணிநேரம் மழை பெய்து கொண்டே இருந்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது. குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. சம்பா நெற்பயிர்களுக்கு இந்த மழை நல்லது அல்ல என்று விவசாயிகள் கூறுகிறார்கள். நெல் வயல்களில் களையெடுப்பு மற்றும் உரம் தெளிக்கும் பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று அதிகாலை தொடங்கிய பலத்த மழை நாள் முழுவதும் கொட்டி தீர்த்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி, பூதமங்கலம், வடபாதிமங்கலம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், பூந்தாழங்குடி, கீழமணலி, கார்நாதன்கோவில், திருராமேஸ்வரம், பழையனூர், நாகங்குடி, பண்டுதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கிராமப்புறங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டன.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை, வல்லூர், தச்சன்வயல், மாங்கோட்டை நத்தம், பைங்காநாடு, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், புதுக்குடி, பாளையக்கோட்டை, நத்தம், எளவனூர், கன்னியாகுறிச்சி, பாவாஜிக்கோட்டை, பெருமாள்கோவில்நத்தம், நத்தம் ஆகிய ஊர்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மன்னார்குடி-22, நீடாமங்கலம்-22, திருத்துறைப்பூண்டி-18, பாண்டவையாறு தலைப்பு-16, நன்னிலம்-12, முத்துப்பேட்டை-10, குடவாசல்-3, வலங்கைமான்-1.
===
Related Tags :
Next Story