பஸ் வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அச்சம்


பஸ் வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அச்சம்
x
தினத்தந்தி 25 Nov 2021 7:40 PM IST (Updated: 25 Nov 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

பஸ் வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அச்சம்

பொள்ளாச்சி
பஸ் வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதி வழியாக பள்ளிக்கு மாணவ- மாணவிகள் நடந்து செல்வதால் அச்சம் அடைந்து வருகிறார்கள். உடனடியாக பஸ் வசதி ஏற்படு்த்தி தர வேண்டும் என்று பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

பஸ் வசதி இல்லை

பொள்ளாச்சி அருகே பழைய சர்க்கார்பதியும், அடர்ந்த வனப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதிய சர்க்கார்பதியும் உள்ளன. பழைய சர்க்கார்பதியில் 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மாணவ-மாணவிகள் படிப்பதற்கு அங்கு அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. 60 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
தொடக்க பள்ளி முடிந்ததும் நடுநிலை, உயர்நிலைபள்ளி படிப்பதற்கு அருகில் உள்ள சேத்துமடைக்கு தான் வர வேண்டும். ஆனால் சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடைக்கு போதிய பஸ் வசதி இல்லை. பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடை வழியாக புதிய சர்க்கார்பதிக்கு ஒரு அரசு பஸ் மட்டும் தான் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சும் பழைய சர்க்கார்பதி கிராமத்துக்குள் வருவதில்லை. அதன் பிரிவில் மாணவ-மாணவிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.

ஆபத்தான பயணம்

அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக அச்சத்துடன் நடந்து கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. சில நேரங்களில் சரக்கு வாகனங்களில் வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தங்கள் வாழ்க்கையை போன்று காட்டுக்குள் முடங்கி விடகூடாது என்பதற்கு சரக்கு ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அனுப்புகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தைக்கு ரூ.300 வரை செலவு செய்யப்படுகிறது. இங்கிருந்து 50 மாணவ-மாணவிகள் சேத்துமடை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டும் அதிகாரிகள் சரக்கு வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள். 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கின்றனர். எனவே பழைய சர்க்கார்பதி, தம்மம்பதி, கல்லாங்குத்து, நாகூரூத்து, பொன்னாலம்மன்துறை, மன்னம் மற்றும் மூவேந்தர் காலனி ஆகிய பகுதிகளுக்கு சேத்துமடையில் இருந்து மினி பஸ் இயக்க வேண்டும். மேலும் புதிய சர்க்கார்பதிக்கு செல்லும் 8 கிலோ மீட்டர் சாலையை சீரமைத்து மீண்டும் காலை முதல் இரவு வரை பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story