கொடைக்கானல் அருகே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு வான்வெளி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் குழு ஆய்வு
கொடைக்கானல் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை வான்வெளி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் குழுவினர் கொட்டும் மழையில் நேரில் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதையடுத்து கொடைக்கானல் மற்றும் ராமேசுவரம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் தொடங்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் பல இ்டங்களை பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் இதுகுறித்து தமிழக அரசுக்கு முதல்கட்ட அறிக்கை சமர்ப்பித்தனர்.
3 பேர் குழு ஆய்வு
இந்தநிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர்தளம் அமைகக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர் குழுவை சேர்ந்த இந்திய அரசின் வான்வழி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் மார்கன், ஆர்.கே.சிங், கியான் பிரசாத் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று பெரும்பள்ளத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பலத்த மழை கொட்டியது.
எனினும் அவர்கள் குடைபிடித்தபடி ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தரைத்தளம் பக்குவமான நிலையில் உள்ளதா, சாலைவசதியை மேம்படுத்த போதுமான வசதிகள் உள்ளதா, ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வான்வெளிப்பரப்பில் இடையூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன், தாசில்தார் முத்துராமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தங்கரத்தினம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1.25 ஏக்கர் நிலம்
பின்னர் மார்கன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெரும்பள்ளம் பகுதியில் 1.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க இடம் வசதியாக உள்ளது. இந்த இடத்தில் செய்யப்பட வேண்டிய கட்டுமானப்பணிகள், மேம்பாட்டு வசதிகள் குறித்து 20 நாட்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும். நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் இங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானல் பகுதியில் ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைய உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story