அம்மாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்


அம்மாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 Nov 2021 4:11 PM GMT (Updated: 25 Nov 2021 4:11 PM GMT)

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அம்மாபாளையம் ஊராட்சியை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர்.

கண்ணமங்கலம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அம்மாபாளையம் ஊராட்சியை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர். 

அடிப்படை வசதிகள்

கண்ணமங்கலம் அருகே அப்பநல்லூர் என்ற அம்மாபாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தலைவராக வெங்கடேசன், துணைத்தலைவராக சித்தார்த்தன் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தலைவர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில்லை. ஊராட்சி நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உள்பட பல்வேறு புகார் சம்பந்தமாக இன்று காலை துணைத்தலைவர் சித்தார்த்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

மேலும் அங்கு உள்ளே இருந்த தலைவர் வெங்கடேசனை, வெளியே வரக்கூறி, ஊராட்சிக்கு பூட்டு போடுவோம் என்றனர். 

ஆனால் அவர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தலைவரிடம் பல்வேறு புகார்கள் குறித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர், உங்கள் புகாரை மனுவாக கொடுங்கள் என்றார். 

பூட்டு போட்டனர்

இதையடுத்து தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் சித்தார்த்தன் மற்றும் சில வார்டு உறுப்பினர்கள் உள்ளே இருந்தபோது பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி அலுவலகத்தை திறந்தனர். 

பொதுமக்கள் கூறுகையில், கிராமத்திற்கு வரும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் அளவுக்கதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. 

இதனால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி கண்ணமங்கலம், வேலூர் வரவேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. துணைத்தலைவர் சித்தார்த்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கூறும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளார். 

இதுகுறித்து பலமுறை கலெக்டர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தினோம் என்றனர். 

ஒத்துழைப்பு வழங்குவதில்லை

இந்த புகார்கள் குறித்து தலைவர் வெங்கடேசன் கூறுகையில், துணைத்தலைவர் சித்தார்த்தன் ஊராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவது குறித்து பலமுறை தபால் அனுப்பியும் வாங்க மறுத்து, கடந்த 4 கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. 

மேலும் ஊராட்சி நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதி செலவினங்களை பரிமாற்றம் செய்ய கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். இதனால் துணை தலைவருக்கு பதிலாக வார்டு உறுப்பினர் யாரேனும் ஒருவருக்கு கையெழுத்து அதிகாரம் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம். 

இதனால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, பழிவாங்கும் நோக்குடன் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். நான் எனது நிலத்தில் வீடு கட்டி தனியாக வசிப்பதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது தொடர்பாக கலெக்டருக்கு புகார் செய்யப்படும். என்றார்.

தீர்மானம் நிறைவேற்றம்

முன்னதாக அம்மாபாளையம் தர்மராஜா கோவில் வளாகத்தில் கிராம முக்கிய பிரமுகர்கள் கூட்டம் நடத்தினர். அதில் தன்னிச்சையாக, மக்களை மதிக்காமல் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

இச்சம்பவம் காரணமாக அம்மாபாளையம் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story