விருத்தாசலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


விருத்தாசலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Nov 2021 4:11 PM GMT (Updated: 25 Nov 2021 4:11 PM GMT)

விருத்தாசலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் தாலுகாவிற்குட்பட்ட சின்னவடவாடி கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். 
இதில் மூத்த வக்கீல் சந்திரசேகரன், வட்டக்குழு உறுப்பினர்கள் குமரகுரு, கலைச்செல்வன், வாலிபர் சங்க வட்டசெயலாளர் பரமசிவம், நகர நிர்வாகிகள் தினேஷ்குமார், சேகர், சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

பேச்சுவார்த்தை

முன்னதாக விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பழங்குடி இருளர் இன பொதுமக்கள், கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் ராம்குமார், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story