5 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை


5 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 25 Nov 2021 10:08 PM IST (Updated: 25 Nov 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நேற்று 5 மணி நேரம் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி:

கனமழை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் தேனி உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. போடி, சின்னமனூர் பகுதிகளில் காலையில் சாரல் மழை பெய்தது.

தேனியில் மாலை 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய கனமழை இரவு 8 மணி வரை நீடித்தது. தொடர்ந்து 5 மணி நேரம் மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது.

இதேபோல் போடி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் மாலை 3 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கி இரவு வரை நீடித்தது. இடைவெளி விடாமல் பெய்த மழையால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் எச்சரித்தனர். 

மேலும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும், போலீசார் சார்பிலும் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று மாலை மழை பெய்தபோது பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று இரவு அறிவித்தார்.

Next Story