மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை; அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022-ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
மோகனூர்:
சர்க்கரை ஆலை
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2021-2022-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா ஆலை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ. ராமலிங்கம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா வரவேற்றார்.
விழாவில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, கரும்பு அரவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சர்க்கரை ஆலையில் 4 ஆயிரத்து 75 ஏக்கர் பரப்பிலான கரும்பு மற்றும் மறுதாம்பு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பும் பெறப்பட்டு அவற்றை அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 755 வழங்கப்படும். இந்த தொகை கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், ஆலையில் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இணை மின் உற்பத்தி திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும். எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை ஆலை வளாகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி, மோகனூர் பேரூர் தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் சரவணகுமார், கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நவலடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story