மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 4:46 PM GMT (Updated: 25 Nov 2021 4:46 PM GMT)

மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி, 

வடகிழக்கு பருவ மழையால் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை தனது முழு கொள்ளளவான 36 அடியில் 34 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 34 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கவில்லை. மாறாக உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. 
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு விவசாய பாசனத்திற்காக மணிமுக்தா அணையை திறந்து வைத்து, பாசன வாய்க்காலில் மலர் தூவினார். 

எவ்வளவு திறப்பு?

மணிமுக்தா அணையில் இருந்து வருகிற 30-ந் தேதி வரை 6 நாட்களுக்கு புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 50 கனஅடி நீரும், பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 15 கன அடி நீரும், அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 70 கன அடி நீரும், பழைய பாசன ஆற்றில் 15 கனஅடி நீரும், பிப்ரவரி 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 75 கன அடி நீரும், பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 50 கனஅடி நீரும் திறந்துவிடப்பட உள்ளது.  இதன் மூலம் அணைகரைக்கோட்டாலம், அகரக்கோட்டாலம், வாணியந்தல், தண்டலை பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர், பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை (நீர் வளத்துறை) செயற்பொறியாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், தி.மு.க.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முருகன் ராமமூர்த்தி, சண்முகம், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மழையால் சேதம் 

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 103 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 பாலங்கள், 364 பெரிய கல்வர்ட்டுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனை சரிசெய்ய முதற்கட்டமாக ரூ.152 கோடியும், முழுவதுமாக புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கு ரூ.1,443 கோடியும் மத்திய குழுவிடம் கோரப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் பாதிப்பு, வீடுகள் சேதம் குறித்து கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வருவாய்த்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Next Story