நாடக கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்


நாடக கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 25 Nov 2021 4:48 PM GMT (Updated: 25 Nov 2021 4:48 PM GMT)

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து நாடக கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேனி:

தமிழக அரசு ‘இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தொடங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் 5 விழிப்புணர்வு தெரு நாடக கலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கலைக்குழுக்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த கலைக்குழுவினர் தேனி மாவட்டத்தில் 443 குடியிருப்புகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். டிசம்பர் மாதம் இறுதி வரை இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. முன்னதாக, தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகரில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். 

அங்கு வாழும் நரிக்குறவர் இன மக்களிடம் அவர் குறைகள் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர். அடிப்படை வசதிகளை ஒரு மாத காலத்துக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story