தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலத்தின் நடுவில் பள்ளம்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் செல்லும் வழியில் உள்ள பாலம் பழுதடைந்து நடுவில் பள்ளம் விழுந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளத்தை மூடி பாலத்தை சரிசெய்ய வேண்டும்.
சண்முகவேல், சேரன்மாதேவி.
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அரிகேசவநல்லூர் வழியாக முக்கூடலுக்கு தடம் எண்-7 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை நம்பியே அரிகேசவநல்லூர் பகுதி மக்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அழகுசெல்வன், அரிகேசநல்லூர்.
பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யப்படுமா?
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் 11-வது வார்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து செல்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.
கலீல், கோட்டூர்.
சாலை வசதி வேண்டும்
பாளையங்கோட்டை புதுக்குளம் பஞ்சாயத்து சீயோன் பட்டினம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சாலை அமைக்க ஏற்பாடு செய்வார்களா?
சுப்பிரமணியன், சீயோன்பட்டினம்.
உபயோகம் இல்லாத இ-சேவை மையம்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் குறிச்சான்பட்டி கிராமத்தில் இ-சேவை மையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக உபயோகம் இல்லாமல் கிடக்கிறது. இதனால் அங்கு புதர்கள் மண்டி, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்த இ-சேவை மையத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள்.
பாலசந்தர், குறிச்சான்பட்டி.
புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னைசாத்தான்குறிச்சி கிராமத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். ஆகவே இந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கார்த்தீசன், ஆத்தூர்.
குண்டும், குழியுமான சாலை
தூத்துக்குடி சங்கரப்பேரி பஞ்சாயத்து கே.டி.சி.நகர் பகுதி சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மோசமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுகிறேன்.
ராம்குமார், தூத்துக்குடி.
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்
நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள கருங்குளம்-கொங்கராயகுறிச்சி சந்திப்பு பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள மின்விளக்கில் போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சிக்கந்தர், கொங்கராயகுறிச்சி.
பஸ்கள் நின்று செல்லுமா?
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பஸ் நிறுத்தத்தில் ஒரு சில பஸ்களே நின்று செல்கிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் அங்குள்ள தெற்கு தெருவில் ஆற்று தண்ணீர் வசதியும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி போதுமான பஸ்கள் அங்கு நின்று செல்லவும், ஆற்று தண்ணீர் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனலட்சுமி, ஆதிச்சநல்லூர்.
Related Tags :
Next Story