3 மணி நேரம் பலத்த மழை பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் அருவிபோல் வழிந்தோடிய தண்ணீர்


3 மணி நேரம் பலத்த மழை பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் அருவிபோல் வழிந்தோடிய தண்ணீர்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:21 PM IST (Updated: 25 Nov 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் அருவிபோல் தண்ணீர் வழிந்தோடியது.


பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இந்தநிலையில் பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. இந்த மழை மாலை 6.20 மணி வரை நீடித்தது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக ஆர்.எப்.ரோடு, சன்னதிரோடு ஆகிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல் சாலை பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் வெளியேறி ஓடியது. எனவே வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
படிக்கட்டுகளில் தண்ணீர்
சபரிமலை சீசன் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. இந்நிலையில் பழனியில் நேற்று பெய்த மழை காரணமாக படிப்பாதை, யானைப்பாதையில் சென்ற பக்தர்கள் நனைந்து அவதிப்பட்டனர். மழையால் பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே 6 மணியளவில் மழை சற்று குறைந்ததால் சிறிது நேரம் ரோப்கார் இயக்கப்பட்டது. பின்னர் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. 
இதனிடையே மழையால் பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் அருவிகளில் விழுவது போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதை அந்த வழியாக சென்ற பக்தர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பழனி பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.


Next Story