‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 25 Nov 2021 4:57 PM GMT (Updated: 25 Nov 2021 4:57 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வடிகால் வசதி வேண்டும்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதி டி.டி.பி.சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் டி.டி.பி.சாலையில் உள்ள கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்துதரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-சாமி, திருவாரூர்.

சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மாணலூர் பகுதியில் கடலாகுடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலையின் நடுவே ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக பள்ளிக்கும் செல்லும், மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்துதரப்பினரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தினால் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாலு, கீழ்வேளூர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த முஷ்டகுடி கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே சாலை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி சாலையின் இருபுறத்தையும் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாஸ்கர், மயிலாடுதுறை.

சாலையில் தேங்கும் மழைநீர்

நாகை மாவட்டம் விழுந்தமாவடி தென்பாதி கிழக்கு மன்மதன்கோவில் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், நாகை.

பயணிகளை அச்சுறுத்தும் மாடுகள்

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டமாக நின்று கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்து கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் அவர்களின் அருகே செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் புதிய பஸ் நிலைய சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவாரூர்.

Next Story