நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 25 Nov 2021 5:45 PM GMT (Updated: 25 Nov 2021 5:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. 
தொடர் மழை 
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மழையை எதிர் பார்த்து பயிரிட்ட நெல்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அழுகும் நிலையில் உள்ளன.
 சிவகங்கை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 180-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.  கனமழைக்கு பல்வேறு இடங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் மண் வீடுகள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்து வருகிறது.
பாதிப்பு 
இந்தநிலையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை தீவிரமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை மையம் 4 நாட்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. 
நேற்று காலை முதல் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோவில், கல்லல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கி இரவு வரை நீடித்தது. இந்த தொடர் மழை காரணமாக நேற்று அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்று காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
நெல் பயிர்கள் மூழ்கின
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே மானாமதுரை, திருப்புவனம், சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி அழுகின.
தற்போது காரைக்குடி, காளையார்கோவில், கல்லல் உள் ளிட்ட பகுதியிலும் பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகிறது. காளையார்கோவில் அருகே ஆலங்குடி பகுதியில் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் வரை பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர். 
மீட்பு குழு
ஏற்கனவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் இடிந்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பலவீனமாக உள்ள வீடுகளில் யாரும் தங்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்கும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உபகரண பொருட்களுடன் தயாராக உள்ளனர்.

Next Story