பலத்த மழை காரணமாக தூத்துக்குடி வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது
தூத்துக்குடி வந்த விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது
தூத்துக்குடி:
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமான நிறுவனம் 3 விமான சேவையை வழங்கி வருகிறது. நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மதியத்துக்கு பிறகு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பயணிகள் வந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால், விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமானம் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு தயாராக இருந்த பயணிகள் அவதிப்பட்டனர். அதே நேரத்தில் மாலையில் வரக்கூடிய மற்றொரு விமானம் மாலை 3.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செல்வதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக கவர்னர் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம் நேற்று மாலை 5.05 மணிக்கு மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது. இதில் பயணம் செய்த சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட 51 பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்கி சென்றனர்.
Related Tags :
Next Story