பொன்னமராவதி, கீரமங்கலத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


பொன்னமராவதி, கீரமங்கலத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 25 Nov 2021 6:19 PM GMT (Updated: 25 Nov 2021 6:19 PM GMT)

பொன்னமராவதி, கீரமங்கலத்தில் பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பொன்னமராவதி:
பலத்த மழை
பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் முன்னதாகவே நிரம்பியது. இந்த மழையால் பூக்குடி வீதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு 
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்பனைக்காடு பகுதியில் கன மழையால் பல இடங்களிலும் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதே போல மேற்பனைக்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து அப்பகுதி வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் அப்பகுதி மக்களை பேட்டை பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அன்னவாசல் 
அன்னவாசல் பகுதியில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்தது. இந்த தொடர் மழையால் அன்னவாசல், மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் இரவு வரை சாலைகளும் கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி
ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகலில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஏரியில் தண்ணீர் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.
அறந்தாங்கி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. எல்.என்.புரம், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் அனைவரும் அமர்ந்தனர். இதனையறிந்த நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

Next Story